நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர
மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். காணொளி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பல மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் பல குடும்பங்களை பாதிப்படைய செய்கிறது.
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வரியைக் குறைத்தாலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை செய்யவில்லை. இதனால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இது ஒரு வகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் தரும் வகையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இதுநாள்வரை, கடந்த எட்டு ஆண்டுகளாக பெட்ரோல் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துவரும் வரி வகிதங்களின் பட்டியலை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
அதில், தற்போது தமிழக அரசு பெட்ரோல் மீது 22 ரூபாய் 54 காசுகளும், டீசல் மீது 18 ரூபாய் 45 காசுகளும் வாட் வரியாக தற்போது விதித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுவே இந்த வாட் வரி 2014 இல் முறையே 15 ரூபாய் 67 காசுகளாகவும், 10 ரூபாய் 25 காசுகளாக இருந்தாகவும் கூறியுள்ளார்.
Also Read : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - காரணம் என்ன?
அதேசமயம், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு தற்போது 27 ரூபாய் 90 பைச கலால் வரியாக வசூலித்து வருவதை பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதேபோன்று டீசல் மீது தற்போது 21 ரூபாய் 80 காசுகள் கலால் வரியாக மத்திய அரசு வாடிக்கையாளர்களிடம் வசூலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுவே 2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது 9 ரூபாய் 48 காசுகளும், டீசலுக்கு 3 ரூபாய் 57 காசுகள் மட்டுமே கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்தாக கூறியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதாக கலால் வரியை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தி இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கும் நிதி அமைச்சர் பிழகிவேல் தியாகராஜன். இந்த உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்தபடி மீண்டும் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.