அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர், டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு - என்ன நடந்தது நள்ளிரவில்?

  • Share this:
புதுக்கோட்டை அருகே, சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதிய விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் கார் ஓட்டி வந்த செல்வம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் 31 வயதான பவ் என்ற வெங்கடேசன். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளாராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்தார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அன்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக் கூறி எம்ஜிஆர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சருடன் வெங்கடேசனும் பங்கேற்றார். அதன்பின், சென்னைக்குப் புறப்பட்ட அமைச்சரை திருச்சி விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார் வெங்கடேசன்.

பின்னர் சொந்த ஊரான பரம்பூருக்குத் திரும்பிச் சென்றபோது, அவர் சென்ற ஜீப் பரம்பூர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெங்கடேசனும், ஜீப்பை ஓட்டிச் சென்ற இடையபட்டியைச் சேர்ந்த 38 வயதான செல்வம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அருகில் இருந்தவர்கள், இருவரின் சடலங்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வெங்கடேசனின் தாய் இந்திரா அதில் வெற்றி பெற்றார். விபத்தின் போது காரில் இருந்த இந்திரா தொடர்பான சுவரொட்டிகளும் சாக்லேட் பாக்கெட்டுகளும் சிதறிக் கிடந்தன.

2017ம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை தொடர்பான வழக்கில் வெங்கடேசன் சாட்சியம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெங்கடேசனின் உடலுக்கு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான பரம்பூருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, வெங்கடேசனின் உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, தனது உதவியாளரான வெங்கடேசனின் உடலைப் பார்த்து அமைச்சர் கதறி அழுதார். மேலும், வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்