ஹைட்ரோ கார்பன்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தமிழக தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

Web Desk | news18
Updated: July 1, 2019, 11:48 PM IST
ஹைட்ரோ கார்பன்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தமிழக தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு
டி.ஆர்.பாலு
Web Desk | news18
Updated: July 1, 2019, 11:48 PM IST
மக்களவையில் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தை எழுப்பிய மக்களவை திமுக தலைவர் டி.ஆர். பாலு, திட்டத்தை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என எச்சரித்தார். இதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தமிழக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, எங்களுக்கு பணக்கார நாடு வேண்டாம் என்றும், ஆரோக்கியமான தேசமே தேவை என்றும் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும், புற்றுநோயை ஏற்படுத்தும், சிறுநீரகத்தை பாதிக்கும், இதயத்தை பாதிக்கும் என்றும் சிவா தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது, “நாங்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிரானவர்கள் என புரிந்து கொள்ளக்கூடாது. இதனை பாலைவனப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். மக்கள் வாழாத பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். இங்கு மக்கள் வசிக்கிறார்கள்.

எதிர்காலத் தலைமுறைகள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். விவசாயம் நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இதற்கு மேலும் அனுமதி கொடுக்கக் கூடாது. அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.”

மக்களவையில் திமுக எம்பி டி.ஆர். பாலு பேசும்போது, இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும், ஒட்டுமொத்த தமிழக மக்களும் இணைந்து போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

திமுக எம்பி டி.ஆர். பாலுவின் பேச்சுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். 

அவர் பேசியதாவது, “ஒரு பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் விவசாயி தான். விவசாயக் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன்.

கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது, விவசாய பிரதிநிதிகளுடன் வந்து என்னை சந்தித்தார்.  தமிழகத்தின் அனைத்து மூத்த தலைவர்களையும் நான் அழைக்கிறேன். விவாதிப்போம். எதுவும் நடந்துவிடவில்லை.

தமிழக அரசுக்கு ஒரு கருத்து உள்ளது. உங்களுக்கும் அதே கருத்து உள்ளது. எதையும் கட்டாயப்படுத்தி செய்யப்போவதில்லை. வெளிப்படையான விவாதத்தை நடத்துவோம். வழியை கண்டுபிடிப்போம்”.

திட்டத்தை கட்டாயப்படுத்தி செயல்படுத்த மாட்டோம் என்றும், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்றும் பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...