ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

திமுக சட்டமன்ற உறுப்பிர் மா.சுப்பிரமணியன்

கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெம்டெசிவர் மருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுகொண்டது. சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுகொண்டார். இந்தநிலையில், இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ராயபுரம் எம்.எல்.ஏ மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    அந்த ஆய்வுக்கு பிறகு பேசிய அவர், ‘ஸ்டான்லி மருத்துவமனையில் 1,950 கொரோனா படுக்கைகள் உள்ளன. ஏற்கனவே 1,200 படுக்கைகள் இருந்த நிலையில், 750 கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 1,950 படுக்கைகள் உள்ளன. 800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. சாதாரண படுக்கைகள் 100 வரை காலியாக உள்ளன. பொறுப்பேற்பதற்கு முன்பே உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் புதிதாக 12,500 ஆக்ஸிஜன் வசதி அடங்கிய படுக்கைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர். மேலும் 12,500 படுக்கைகள் தேவை என மருத்துவர்கள் கேட்டார்கள். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ரெம்டிசிவிர் கீழ்ப்பாக்கத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் விநியோகம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆய்வுகள் நடத்தி பேரிடரில் இருந்து மக்களை மீட்டெடுப்போம். தனியார் மருத்துவமனை விலை நிர்ணய பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாகும். ஊரடங்கிற்கும் மருத்துவத் தேவைகளுக்கும் தொடர்பில்லை. அவை தொடர்ந்து நடக்கும். மருத்துவமனைகளுக்கு வெளியே நிற்கும் ஆம்புலன்சில் யாருக்கு அவசர தேவையோ அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

    மருத்துவமனை வந்த ஒரு மணி நேரத்தில் படுக்கை கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் வீடு வீடாக மருத்துவ பணியாளர்கள் சோதனை செய்வார்கள். தொடக்க நிலை தொற்றாளர்களுக்கு சித்தா, ஆயுர்வேதா மருத்துவம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவையறிந்து உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் இப்போது இல்லை. இனியும் ஏற்படாது’ என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: