ஒரு மாதத்தில் குட்கா, பான் மசாலா முற்றிலும் ஒழிப்பு: விற்பனை தொடர்ந்தால் கடைகளுக்கு சீல் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிரடி

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா விற்பனை தொடர்ந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்களின் விற்பனையை ஒரே மாதத்தில் ஒழிக்க வேண்டும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் புகையிலை அடங்கிய குட்கா பான்மசாலா பொருட்களின் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் 2013ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் தடை இல்லாமல் இந்தப் பொருட்களின் விற்பனை நடைபெறுவதாக வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து புகையிலை தடுப்பு மற்றும் நடவடிக்கைக்கான அவசர கலந்தாய்வுக் கூட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கூட்டினார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தடுப்பில் அதிகமாக நேரம் செலவிட்டதால் புகையிலை தடுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று பேசினார்.

இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து உள்ளதால் நின்று கொல்லக்கூடிய புகையிலை பொருட்களின் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறினார். தண்டனையை கடுமையாக்குவதன் மூலம் புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த முடியும் என பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், குட்கா பான்மசாலா போன்ற பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, உடனடியாக செயல் வைத்தால் பல வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதலில் நோட்டீஸ் இரண்டாவது முறை அபராதம் அதன் பின்னரும் விற்பனை தொடர்ந்தால் மூன்றாவது முறையில் சீல் வைப்பதை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

விக்ரமராஜாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதன்படி செயல்படுமாறு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிட்டார். பான் மசாலா விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு ஒரே மாதத்தில் புகையிலையை முற்றிலுமாக தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி பூண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட புகையிலை பொருட்களை பயன்படுத்துவது வேதனை தரும் விஷயமாக இருப்பதாக பேசிய அவர், பள்ளி கல்லூரி வாசல்களில் விழிப்புணர்வு பொம்மைகளை வைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.
Published by:Karthick S
First published: