பூஸ்டர் டோஸ் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி - மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் பூஸ்டர் டோஸ் தொடர்பான பூர்வாங்க பணிகள் தொடங்கவில்லை.

  • Share this:
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்துப் பேசிய, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று உறுதியளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடிபழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய விஜயபாஸ்கர், கொரனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக பேசினார்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் , கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசு தடையின்றி தடுப்பூசிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அங்கொன்று இங்கொன்றுமாக கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவிகிதம் பேருக்கு மீண்டு தொற்று உறுதியாகவில்லை எனவும் இறப்பு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பூஸ்டர் டோஸ் பொறுத்த வரையில் அதனை செயல்படுத்த ஒன்றிய அரசு சார்பில் பல்வேறு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு இதுவரை அது தொடர்பான செயல்முறைகளை வழங்காத நிலையில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் பூஸ்டர் டோஸ் தொடர்பான பூர்வாங்க பணிகள் தொடங்கவில்லை எனவும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

Must Read : தமிழகத்தில் ஒரேநாளில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் : 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தால் இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் வழங்கும் பணிகளை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் எனவும் மா சுப்பிரமணியன் அப்போது உறுதியளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published: