மு.க.ஸ்டாலினிடம் ஏன் புன்சிரிப்பு இல்லை- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மு.க.ஸ்டாலின், மா.சுப்ரமணியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புன் சிரிப்பு ஏன் இல்லை என்பதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

 • Share this:
  சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரை சந்திக்க வருபவர்கள் அவரிடம் எப்போதும் இருந்த கதாநாயக புன் சிரிப்பு, பொறுப்பேற்ற பிறகு ஏன் இல்லை? என கேட்பதாக தெரிவித்தார். அவர்களிடம் பதிலளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த உச்சத்தில் இருக்கும்போது பொறுப்பேற்றிருக்கும்போது எப்படி சந்தோசமாக இருக்க முடியும் எனவும், தான் ஏற்றிருப்பது மலர் கிரீடம் இல்லை, முள் கிரீடம் என கூறுவதாக தெரிவித்தார். முதலமைச்சரின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் 7,427 தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது, இன்னும் ஒருவார காலத்திற்குள் முற்றிலும் இல்லாத தமிழ்நாடு என்கிற நிலை வரும் எனவும் சுப்பிரமணியன் கூறினார்.

  தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்படுத்த வேண்டும் என்றும், கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்பட கூறியுள்ளார்.

  சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய மா.சுப்ரமணியன், ‘திமுக அரசு பொறுப்பேற்ற போது கொரோனா பாதிப்பு நாள் ஒன்றிற்கு 36,184 ஆக இருந்ததாகவும், பொறுப்பேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

  மேலும், தடுப்பூசி ஒதுக்கீடு, செங்கல்பட்டு தடுப்பூசி மையம் திறப்பு உள்ளிட்டவை தொடர்பாக பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், 14ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்தும் முதலமைச்சர் வலியுறுத்தியதாகவும், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதற்கு முதல்வரின் நடவடிக்கையே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

  தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் கோவையில் ஆய்வு மேற்கொண்ட போது ஐ சி யூ பிரிவிற்கு செல்கிறேன் என கூறிய போது அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், இந்தியாவில் முதல் முதல்வராக ஐ.சி.யூ பிரிவிற்கு சென்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனவும் பெருமிதம் கொண்டார்.

  தடுப்பூசி மத்திய அரசிடமிருந்து வந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பிரதமரின் அறிவிப்பின்படி நேற்றிலிருந்து மத்தியஅரசிடம் இருந்து ஓரளவு தடுப்பூசி வர தொடங்கியுள்ளதாகவும், அடுத்த மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புவதாக அறிவித்துள்ளதாகவும், 10 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவைப்படுவதாகவும், தடுப்பூசி இருந்தால் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த இயலும் எனவும் தெரிவித்தார்.

  தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என கூறிய அவர், 89,618 புதிய படுக்கைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் உருவாக்கபட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கான படுக்கைகளும் தயார்படுத்தப்பட்டு வருகிறது என்றும், கொரோனா 3ம் அலை உருவானாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் உறுதிப்பட தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: