தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணிவதில் மற்றவர்களுக்கு சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அரசு கண் மருத்துவமனையில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான “மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவை” வாகனங்கள் மற்றும் கண் மருத்துவ உபகரணங்களை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவைக்காக 90 லட்சம் ரூபாய் செலவில் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாகனங்கள் மூலம் அனைத்து கிராமபுறங்களிலும் சென்று மக்களுக்கு கண் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் மூலம் இதுவரை 42 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட 1.19 சதவீத முதியோர்களுக்கு இந்தியாவில் பார்வை குறைபாடு இருக்கிறது. தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.18 சதவீதம் பேருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. ஆனாலும், கிராமபுறங்களில் கண்புரை பாதிப்பு, சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு, நீர் அழுத்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் இதேபோன்று மேலும் பல வாகனங்கள் விரைவில் தொடங்கி வைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிற நிலையில், சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சென்னை குடிசைப்பகுதியில் 32 சதவீதம் பேர் தான் முக கவசம் அணியும் தகவல் வருத்தம் அளிக்கின்றது.
Read More: ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் ஓமைக்ரான் பாதித்த 45 பேரில் 23 பேர் டிஸ்சார்ஜ்
அதேபோல், வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்களில் 58 சதவீதம் பேர் மட்டுமே முக கவசம் அணிகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் 100 சதவீதம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அந்தவகையில் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனவே, சென்னையில் மக்கள் முக கவசம் அணிந்து, மற்ற பகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்து செயல்பட வேண்டும். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Read More : தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - தகவல்
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். தனியார் விடுதி நிர்வாகங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான எந்த ஒரு விளம்பரமும் இதுவரை வெளியிடவில்லை. எங்களுடைய அறிவுறுத்தல்களை, கட்டளையாக ஏற்று அவர்கள் செயல்படுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.
Must Read : புத்தாண்டு கொண்டாட்டம்... சென்னை காவல் துறையின் கட்டுப்பாடுகள், அறிவுரைகள்
இதனையும் மீறி, விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றால், அதனை காவல் துறையினரும், உள்ளாட்சி துறையினரும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். சென்னையில் அதிக பாதிப்பு உள்ள 13 இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.