கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கட்டணத்தை குறைத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியாக இருந்து தற்போது கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள கல்லூரியில் MBBS, BDS பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே தனியார் கல்லூரியாக இருந்தபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படுவதாகவும், அதை குறைத்து அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசை வலியுறுத்தும் விதமாக அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முன்னர் தனியார் மருத்துவக் கல்லூரியாக இருந்த போது, அதில் MBBS பயில ரூ.5,44,370, BDS பயில ரூ.3,45,000 என்று நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்துவதாக ஒப்புக்கொண்டே மாணவர்கள் சேர்ந்ததாக தெரிவித்தார்.
ஆனால் பின்னர் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பின் தங்களுக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் போராட்டங்களை நடத்தியதாகவும், அப்போது போராட்டக்களத்துக்கே நேரடியாக சென்று, இளைய சமுதாயத்தின் வழிகாட்டியாக இருக்கும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தந்ததாக தெரிவித்தார்.
Also read... திமுக வந்தாலே மின்வெட்டுதான்.. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்
அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தபின் உயர்கல்வித்துறை, நிதித்துறை, மாணவர்கள் ஆகியோருடன் ஆலோசித்து MBBS படிப்புக்கு இருந்த ரூ.5,44,370-ல் ரூ.1,44,000-ஐ குறைத்து ரூ.4 லட்சமாக மாற்றியதாகவும், அதேபோல் BDS படிப்புக்கு ரூ.3,45,000 என்று இருந்ததை ரூ.95,000 குறைத்து ரூ.2,50,000 என்று மாற்றியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.119.888 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடப்பு 2021 - 2022ம் கல்வியாண்டில் MBBS, BDS சேர்ந்த மாணவர்களுக்கு முறையே ரூ.13,610, ரூ.11,610 என்று அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அதிக கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொண்டவர்களுக்கு கருணை உள்ளத்துடன் சற்று கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், முழுவதுமாக குறைத்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், படிக்கும் காலத்தில் போராட்டம் என்பது சரியானது அல்ல என்றும் விளக்கமளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.