கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ்... சட்டப்பேரவையில் உருக்கமான பேச்சு

கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ்... சட்டப்பேரவையில் உருக்கமான பேச்சு

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

கொரோனா தொற்றால் மீண்டும் 19ஆம் தேதி மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டேன். என் உயிர் உடலில் இருக்கிறதா? இல்லையா என்று தெரியாத நிலை ஏற்பட்டது....

  • Share this:
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ”கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்டேன். தொடர்ந்து 2 முறையாகவும் அமைச்சராக பதவி வகித்து வருகிறேன்.
கொரோனா தொற்றால் கடந்த  ஜனவரி ஐந்தாம் தேதி முதல் முறையாக பாதிக்கப்பட்டேன். மீண்டும் 19ஆம் தேதி மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டேன். என் உயிர் உடலில் இருக்கிறதா? இல்லையா என்று தெரியாத நிலை ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  டெல்லியில் இருந்தார். அவர் அமைச்சர் விஜயபாஸ்கரை அனுப்பி உடனே பார்க்க சொன்னார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் எனது மகனை தொடர்ப்பு கொண்டு பேசினார். மருத்துவமனையில் இருக்கும் நான் பிழைத்துக் கொள்வேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதலாக கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது போல், நான் மறுபிறவி எடுத்து உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “ உயிரற்ற சடலம்போல ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த போது, முதல்வர் உடனடியாக பேசி காமராஜுக்கு ஒன்றும் ஆகாது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றார். டெல்லியில் இருந்து உடனடியாக கிளம்பி நேரடியாக மருத்துவமனைக்கு வந்தார். என் உயிரை இங்கு வந்து அவையில் நிறுத்தி வைத்திருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் எனது சந்ததி முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறது” என்று நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க... உங்கள் தொகுதி: நத்தம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

அதனைத் தொடர்ந்து பேசிய சட்டப் பேரவைத் தலைவர் தனபால், ” கொரோனா தொற்றால் அமைச்சர் பாதிக்கப்பட்டது அறிந்து வேதனை அடைந்தேன். குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தேன். இப்போது அவர் குணமடைந்து இந்த அவையில் பதிலளித்துள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இறைவன் இருக்கிறான். அம்மாவின் ஆசி இருக்கிறது. முதல்வரின் பாசம் இருக்கிறது.  துணை முதல்வரின் நேசம் இருக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என எனது சார்பிலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்” என  தெரிவித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: