ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாருங்க... பாருங்க... இது தான் வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு - வாக்குறுதிகளை புகைப்படங்களாக காட்டி கடம்பூர் ராஜூ பிரச்சாரம்

பாருங்க... பாருங்க... இது தான் வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு - வாக்குறுதிகளை புகைப்படங்களாக காட்டி கடம்பூர் ராஜூ பிரச்சாரம்

பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ

பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ

பாருங்க ! பாருங்க! இது தான் அதிமுக தரப்போற வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என்று கூறி கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காணும் அமைச்சர் கடம்பூர் ராஜு அ.தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளளை மாடல் படங்களுடன் காண்பித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு வேட்பாளரும் மக்களின் கவனத்தினை தங்கள் பக்கம் திருப்புவதற்கு புது புது முயற்சிகளையும், ‌வினோத செயல்களையும் செய்து அசத்தி வருகின்றனர்.

அதிலும் மிக முக்கியமாக இடம் பெற்றிருக்கிறது தேர்தல் வாக்குறுதிகள். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி எப்போதுமே தி.மு.கவின் தேர்தல் கதாநாயகன் தேர்தல் வாக்குறுதி என்பார். அதுபோன்றுதான் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அ.தி.மு.க, தி.மு.க இரு கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை முன்னெடுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காரணம் இரண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தேர்தல் இலவச திட்டங்கள் தான். இந்த இலவசத் திட்டங்களை தான் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் முன்னிறுத்தி தேர்தல் களத்தில் சந்தித்து வருகின்றனர்.

அந்த இலவசத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல யுக்கத்திகளை வேட்பாளர்கள் கையாளுகின்றனர். அந்தவகையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காணும் கடம்பூர் ராஜு அதிமுக அறிவித்துள்ள திட்டங்களின் மாடல் படங்களை அச்சிட்டு பொதுமக்களிடம் காண்பித்து வாக்குகளை சேகரிக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச வாஷிங் மெஷின், வருடத்திற்கு 6 சமையல் சிலிண்டர் இலவசம், சோலார் ஸ்டவ் அடுப்பு, அரசு பஸ்சில் மகளிருக்கு பாதி கட்டணம், 150 நாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்  ஆகியவற்றை குறிக்கும் வகையில் அதற்கான படங்களை அச்சிட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது கொண்டுசெல்கிறார்.

குறிப்பாக பெண்களிடம் அ.தி.மு.க சொல்லி உள்ள தேர்தல் வாக்குறுதிகள் இதுதான். அ.தி.மு.க வெற்றி பெற்றவுடன் தரக்கூடிய வாஷிங் மெஷின் மாடல் இதுதான். சோலார் ஸ்டவ் மாடல் இதுதான் என்று அதனை காண்பித்து மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு. அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வீடு வீடாக வாஷிங் மெஷின் கொண்டு தருவோம். அதற்கான ஏற்பாடுகளை தற்போதே தயார் செய்து  வைத்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் கடம்பூர் செ ராஜு கூறி வாக்குகளை சேகரித்து வருகின்றார்.

அ.தி.மு.க இதுவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிய காரணத்தினால்தான் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அ.தி.மு.க ஆட்சி புரிவதற்கு மக்கள் வாக்களித்தனர். தற்போது கூறியுள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் அ.தி.மு.க நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அ.தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தொடர்ச்சியாக  மூன்றாவது முறையாக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:

Tags: ADMK, Kadambur raju, Kovilpatti Constituency, TN Assembly Election 2021