நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான் நிம்மதியாக இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான் நிம்மதியாக இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்படத்துறையில் ஓடிடி  பிரச்சினை என்பது, நமது மாநிலத்துக்கு உரிய பிரச்சினை மட்டும் கிடையாது. அது உலகளாவிய பிரச்சினை என்றார் கடம்பூர் ராஜூ.

  • Share this:
    நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர் என்றும், மு.க.ஸ்டாலின்  ஒருவர் தான் நிம்மதியாக இல்லை எனவும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாச்சியார்பட்டியில், அம்மா நகரும் நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து வில்லிசேரியில் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர். மு க ஸ்டாலின்  ஒருவர் தான் நிம்மதியாக இல்லை. முக ஸ்டாலினுக்கு தான் ஆட்சிக்கு வர முடியவில்லை, முதல்வராக முடியவில்லை என்று நிம்மதி இல்லாமல் இருக்கிறார். அதனால்தான் மற்றவர்களை பற்றி குறி கூறுகிறார்.

    திமுக ஆட்சி போன்று, சட்டம் ஒழுங்கு அதிமுக ஆட்சியில் கெட்டுப் போகவில்லை. நில அபகரிப்பு இல்லை, மின்வெட்டு இல்லை என்றும்,  எதுவெல்லாம் இருக்கக் கூடதோ அது எல்லாம் இல்லை என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.  தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து இல்லை ,வன்முறை இல்லை.

    கருத்துக் கணிப்பு நடத்தியதற்காக, திமுக ஆட்சிக்காலத்தில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் இருந்த 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். மாற்றுக் கருத்து கூறியதற்காக லீலாவதி என்ற கவுன்சிலர் மதுரையில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றது.

    திமுக ஆட்சி காலத்தில் 15 மணி நேர மின்வெட்டு காரணமாக இருண்ட தமிழகமாக இருந்தது. இதனால் விவசாயம், தொழில்துறை பாதிக்கப்பட்டது. மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர். ஆனால் இன்றைக்கு அந்தநிலை இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து. மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் நிலையில் உள்ளது. ஒளிமயமான தமிழகத்தினை உருவாக்கியுள்ளோம் என்றும், பத்தாண்டு காலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை துளியளவு கூட இல்லை. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதி என்பது மு.க.ஸ்டாலினுக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

    திமுக தரப்பில் இருந்து தனக்கு தூது  வந்ததாக கமல்ஹாசன் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, தேர்தல் நேரத்தில் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தூது விடலாம் என்றும், சேர்வதும் சேராமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம். அது பற்றி எங்களுக்கு கவலை  இல்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் அதிக அளவு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தந்துள்ளோம். பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, குழுவும் அமைக்கப்பட்டுள்ளது அது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

    சினிமா துறையில் கடந்த 5 ஆண்டுகளில்  வெளிப்படைத் தன்மை இருந்தது. திரைப்படம் எடுப்பது வெளியிடுவது எல்லாமே சுதந்திரமாக யதார்த்தமாக இருந்தது. பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு விழா, மணி மண்டபம் அமைத்தல் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும், சுமார் 50 ஆண்டுகால சாதனை செய்த  மனநிறைவு உள்ளது.

    திரைப்படத்துறையில் ஓடிடி  பிரச்சினை என்பது,  நமது மாநிலத்துக்கு உரிய பிரச்சினை மட்டும் கிடையாது. உலகளாவிய பிரச்சினை என்றும், இன்றைய கால சூழ்நிலையில் ஓடிடியை தவிர்க்க முடியாது. இதனை கட்டுப்படுத்துவது என்பது அரசின் கையில் இல்லை, அந்த துறையினர் அமர்ந்து பேசினால்தான் முடியும் என்றும், ஓடிடியை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை அது அரசுக்கும், எங்கள் துறைக்கும் பெரும் சவாலாக இருந்தது என்ற உணர்வு மட்டும் உள்ளது. இந்நிலையில், சினிமாத்துறைக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில், அரசு  தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற பிரச்சினையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற திருப்தி உள்ளது.

    நாடகமெல்லாம் நடிக்க, திமுகவிற்குதான் தெரியும். பிரச்சாரம் செய்யும் எல்லா ஊர்களிலும்  ஒரே மாதிரி செட்டிங் போட்டு மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் இயங்கவில்லை இயக்க படுகிறார்.

    Must Read - இடைக்கால பட்ஜெட்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்

     

    முதலமைச்சர், எதார்த்தமாக பிரச்சாரம் செய்கிறார். ஆகையால்தான் மு.க.ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் நாடகமாகத்தான் தெரியும். தமிழகத்தின் மீது அக்கறை உள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் குண்டார் -  காவிரி இணைப்பு மு.க.ஸ்டாலின் வரவேற்று இருந்திருக்க வேண்டும். மு க ஸ்டாலின் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
    Published by:Suresh V
    First published: