HOME»NEWS»TAMIL-NADU»minister kadambur raju said every one being happy in tamil nadu skd

நாட்டில் மு.க.ஸ்டாலினைத் தவிர அனைவரும் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினைத் தவிர அனைவரும் நிம்மதியாக உள்ளனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நாட்டில் மு.க.ஸ்டாலினைத் தவிர அனைவரும் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • Share this:

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நாட்டில் எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர். மு.க.ஸ்டாலின் ஒருவர் தான் நிம்மதியாக இல்லை.  மு.க.ஸ்டாலினுக்கு தான் ஆட்சிக்கு வர முடியவில்லை, முதல்வராக முடியவில்லை என்று நிம்மதி இல்லாமல் இருக்கிறார். எனவே மற்றவர்களை பற்றி கூறுகிறார். தி.மு.க ஆட்சி போன்று சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகவில்லை.

நில அபகரிப்பு இல்லை. மின்வெட்டு இல்லை. எது எல்லாம் இருக்கக் கூடதோ அது எல்லாம் இல்லை என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து இல்லை. வன்முறை இல்லை.

கருத்துக் கணிப்பு நடத்தியதற்காக தி.மு.க ஆட்சிக்காலத்தில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் இருந்த 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.



மாற்றுக் கருத்து கூறியதற்காக லீலாவதி என்ற கவுன்சிலர் மதுரையில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றன.

தி.மு.க ஆட்சி காலத்தில் 15 மணி நேர மின்வெட்டு காரணமாக இருண்ட தமிழகமாக இருந்தது. இதனால் விவசாயம், தொழில்துறை பாதிக்கப்பட்டது. மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர். ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து. மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் நிலையில் உள்ளது.

ஒளிமயமான தமிழகத்தினை உருவாக்கியுள்ளோம். பத்தாண்டு காலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை துளியளவு கூட இல்லை.

மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதி என்பது மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்றார். தேர்தல் நேரத்தில் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தூது விடலாம். சேர்வதும் சேராமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம். அது பற்றி எங்களுக்கு கவலை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எண்ணியதைவிட அதிக அளவு மக்களுக்கு திட்டங்களை தந்துள்ளோம். பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது

சினிமா துறையில் கடந்த 5 ஆண்டுகளில் வெளிப்படைத் தன்மை இருந்தது.‌ திரைப்படம் எடுப்பது வெளியிடுவது எல்லாமே சுதந்திரமாக யதார்த்தமாக இருந்தது.

பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு விழா, மணி மண்டபம் அமைத்தல்‌ மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் சுமார் 50 ஆண்டு கால சாதனை செய்த மனநிறைவு உள்ளது.

திரைப்படத்துறையில் ஓடிடி பிரச்சனை என்பது நமது மாநிலத்துக்கு உரிய பிரச்சினை கிடையாது. உலகளாவிய பிரச்சினை.

இன்றைய கால சூழ்நிலையில் ஓடிடி தவிர்க்க முடியாது. இதனை கட்டுப்படுத்துவது என்பது அரசின் கையில் இல்லை. அந்த துறையினர் அமர்ந்து பேசினால் தான் முடியும்.

ஓடிடியை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. அது அரசுக்கும், எங்கள் துறைக்கும் பெரும் சவாலாக இருந்தது என்ற உணர்வு மட்டும் உள்ளது.  சினிமாத்துறைக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற பிரச்சினையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற திருப்தி உள்ளது.

நாடகமெல்லாம் நடிக்க திமுகவிற்கு தான் தெரியும். பிரச்சாரம் செய்யும் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி செட்டிங் போட்டு மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். மு.க.ஸ்டாலின் இயங்கவில்லை. இயக்கப்படுகிறார்.

முதல்வர் எதார்த்தமாக பிரச்சாரம் செய்கிறார். ஆகையால்தான் மு.க.ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் நாடகமாக தெரியும். தமிழகத்தின் மீது அக்கறை உள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் குண்டாறு காவிரி இணைப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கவேண்டும். மு.க.ஸ்டாலின் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: