Home /News /tamil-nadu /

மக்கள் நலனுக்காகவே வேல் யாத்திரைக்கு தடை.. யாராக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்படவேண்டும்.. - அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் நலனுக்காகவே வேல் யாத்திரைக்கு தடை.. யாராக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்படவேண்டும்.. - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் நலனுக்காகவே வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இது மக்கள் நலனுக்கானது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

    வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “மக்கள் நலனுக்காகவே வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். இது மக்கள் நலனுக்கானது” என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு எந்த போராட்டமும், ஊர்வலமும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் பேசியபோது, “வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்னும் கருத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கொரோனா அலை அபாயம் இருப்பதால், சூழநிலையை பாதுகாப்பாக மாற்றுவதற்காக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பில் அனைவருக்கும் கடமை இருக்கிறது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

    எம்.பி ரவிக்குமார், விசிக அவர் பேசியபோது, “தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். தமிழகம் மத அரசியலை வரவேற்காது என்பதற்கு சான்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவித்ததற்காக வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

    மேலும் படிக்க: வேல் யாத்திரை தடை: இதன் மூலமாவது பாஜக கூட்டணியை விட்டு போய்விடாதா என அதிமுக எண்ணுகிறதோ? - கோலாகல ஸ்ரீநிவாஸ்.

    மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் இதுகுறித்து பேசுகையில், “தமிழக அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு பாஜகவுக்கு எதிரானது. 2018 மார்ச்சில் ராமராஜ்ய யாத்திரை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது, ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தடை கோரியபோது, தமிழக முதல்வர் அதை அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த முறை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது கூட்டணியை பாதிக்கலாம். பாஜக நம் கூட்டணியை விட்டு போய்விடாதா என அதிமுக எண்ணுகிறதோ என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

    வேல் யாத்திரைககான சுற்றுப்பயண விவரத்தை பாஜக வெளியிட்டிருந்தது. நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த வேல் யாத்திரை நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அதில், ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இந்த யாத்திரை நடந்தால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், யாத்திரை நிறைவு பெறும் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி, தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு எந்த போராட்டமும், ஊர்வலமும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: BJP, L Murugan, Murigan, Vel Yatra

    அடுத்த செய்தி