சசிகலாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை - நமது எம்.ஜி.ஆர் கட்டுரை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவை அ.தி.மு.கவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக பெங்களூருவிலுள்ள விக்டோரியா அரசு மருத்துமனையில் தொடர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தநிலையில், சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியையும், பா.ஜ.கவையும் கடுமையாக சாடி நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில், ‘எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும், பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும் எனவும் கட்டுரை

  சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்தவருக்கு காட்டும் விசுவாசும் இது தானா ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்றுவிட்டு, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்களுக்கும் உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்யும் துரோகிகளும் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் காட்டமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

  தனியாக நின்று டெபாசிட் வாங்க கூட யோக்கியதை இல்லாத பச்சோந்தி கூட்டங்கள் ஆணைப்போட்டு தடுத்தாலும், உங்களால் கோட்டை ஏறமுடியாது என பாஜகவை மறைமுகமாக சீண்டியிருக்கிறது நமது எம்.ஜி.ஆர். மேலும், அ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த கட்டுரை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘சசிகலாவுவையும் அ.ம.மு.கவையும், அ.தி.மு.கவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தெளிவுபடுத்திவிட்டார். சசிகலா பூரண உடல்நலன் பெற வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சொல்லியது மனிதாபிமான அடிப்படையில்தான்’என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: