• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EXCLUSIVE ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

EXCLUSIVE ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

ஜெயக்குமார் - ரஜினிகாந்த்

ஜெயக்குமார் - ரஜினிகாந்த்

1971 சம்பவத்தை ஏன் ரஜினி இப்போது பேச வேண்டும்? உள்நோக்கத்துடன் அவர் பேசியிருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்ள முடியாது - ஜெயக்குமார்

  • Share this:
    பெரியார் குறித்த சர்ச்சையான கருத்தை பதிவு செய்த ரஜினி அதற்கு ஆதாரமாக ஏன் துக்ளக் பத்திரிகையை காட்டவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார்.

    துக்ளக் பத்திரிகையில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஏன் துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை காட்டவில்லை? சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கில நாளிதழின் ஆதாரத்தை ஏன் காட்ட வேண்டும்? இதுவே அதில் உண்மை இல்லை என்பதை காட்டுகிறது.

    1971 சம்பவத்தை ஏன் ரஜினி இப்போது பேச வேண்டும்? உள்நோக்கத்துடன் அவர் பேசியிருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்ள முடியாது. மறுக்கத் தேவையில்லை மறக்க வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த் ஏன், 1971ல் நடந்த சம்பவத்தை இப்போது மறக்காமல் ஞாபகம் வைத்து பேசுகிறார். இதுவே பெரிய முரண்.

    தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் பெரியார். அவருடைய புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்தால் கட்டாயம் அதிமுக கண்டன குரல் எழுப்பும். எதையும் முழுமையாக அறிந்துகொண்டு பேசவேண்டும். போற போக்கில் பேசக்கூடாது. பெரியாரை ஏன் ரஜினி வம்புக்கு இழுக்க வேண்டும். அதுவே இங்கு முக்கியமான கேள்வி.

    பெரியார் அனைவருக்கும் பொதுவானவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தோள்கொடுத்து அனைவர் நெஞ்சிலும் வாழ்ந்து வருபவர் பெரியார். இப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரியாரை பழித்து அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது“ என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: