சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியானது. மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனும், பின்னர் பிற்பகலில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய ஆலோசனை கூட்டங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.
அந்த நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தநிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவுக்கான அழைப்பிதழில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, சென்னை திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம்பெறவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிராதான நிகழ்ச்சிகளில் மட்டும் தான் துணை முதல்வர் பெயர் இருக்கும். இது சென்னை மண்டலத்தில் நடக்கும் நிகழ்ச்சித்தான். அதனால் எந்த உள் நோக்கம் இல்லை.
மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டத்தில் துணை முதல்வர் பங்குபெறாமல் தன் ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியது ஏன் என்ற கேள்விக்கு, செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அவர் கட்சி வேலைகளை செய்து இருக்கிறார். எனவே அவர் வரவில்லை. 7ஆம் தேதிக்குள் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, தலைமைக் கழகம் எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் நான் பதில் சொலமுடியும். பொறுத்திருந்து பாருங்கள்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.