டி.டி.வி.தினகரனிடம் காசுவாங்கிக்கொண்டு குருமூர்த்தி பேசுகிறார் - ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசியலில் குருமூர்த்தி, தான் கிங் மேக்கர் என்று பில்டப் செய்து வருவதாகவும், டி.டி.வி.தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு இவ்வாறு பேசி வருகிறார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

 • Share this:
  திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், வி.ஜி.பி.சந்தோஷம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜாதி, மதம் ,இன, மொழி அனைத்தையும் கடந்து வரும் ஒரு குறள் திருக்குறள் என்றும், யாகாவாராயினும் நா காக்க என்பது அரசில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

  மேலும், குருமூர்த்தி கருத்திற்கு அவர் மனதில் சாணக்கியன், கிங் மேக்கர் என்று நினைத்து கொண்டிருப்பதாகவும், பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் என்றும், 2021ல் அதிமுகவை கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டதாகவும், இல்லாத விஷயத்தில் வேண்டுமென்றே மாயையை ஏற்படுத்துவது அறிவற்றதன்மை என்றும் குற்றம்சாட்டினார்.

  யாருக்காக குருமூர்த்தி வக்காலத்து வாங்குகிறார் என கேள்வி எழுப்பிய அவர், டி.டி.வி.தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு குருமூர்த்தி பேசி வருவதாகவும், குருமூர்த்தி எப்போது நாரதர் வேலை பார்க்க ஆரம்பித்தார் என்றும், தமிழக அரசியலில் கிங் மேக்கர் என்று குரு மூர்த்தி பில்டப் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

  தொடர்ந்து பேசிய அவர், ஜே.பி.நட்டா கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்றும், ஒருமித்த கருத்தோடு அனைவரும் இருக்கும்போது வெண்ணை திரண்டு வரும் போது பானை உடைப்பது போல யாரும் செய்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

  ராகுல் காந்தி கருத்திற்கு பதிலளித்த அவர், ஜல்லிக்கட்டை ஒழித்ததே காங்கிரஸ், திமுக தான் என்றும், தேர்தல் சமயம் என்பதால் தான் ராகுல் காந்தி மதுரை வந்துள்ளதாகவும், ஓட்டு பிச்சை கேட்டும், செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடி வந்திருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: