உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

    அ.தி.மு.கவின் உறுப்பினர்களாக இல்லாத சசிகலா, தினகரன் எப்படி கட்சியை மீட்க முடியும் - அமைச்சர் ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    அ.தி.மு.கவின் உறுப்பினர்களாக இல்லாத சசிகலா, டி.டி.வி.தினகரன் எப்படி அதிமுகவை மீட்போம் என்று சொல்லமுடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • Share this:
    ­­­­சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’அரசு ஊழியர்கள் சங்கத்தினருடன்  தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அவர்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
    அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    தி.மு.க ஆட்சியை விட, அ.தி.மு.க ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் தந்துள்ளதாகவும், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப அவ்வப்போது அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், அ.ம.மு.க நடந்து முடிந்த தேர்தல்களில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு கட்சியை முடக்க நினைத்தவர்கள். அவர்கள் அ.தி.மு.கவை உரிமை கொண்டாட எந்த தார்மீக உரிமையும் இல்லை. அ.தி.மு.கவின் உறுப்பினர்களாக இல்லாத சசிகலா, தினகரன் எப்படி அதிமுகவை மீட்போம் என்று சொல்லமுடியும். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து கொண்டு இருப்பதாகவும், டி.டி.வி.தினகரனின் கருத்துகளை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

    சசிகலா வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும், அதிமுக-அமமுக இணைய வாய்ப்பு கிடையாது என்றார். மேலும், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்படுவது குறித்த கேள்விக்கு, கட்சிக்கு என கட்டுப்பாடு இருப்பதாகவும், அதை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலும், நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகழ், பெருமையை சமூகத்திற்கு எடுத்து சொல்ல வேண்டுமென்ற அடிப்படையில், உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெறுவதால், அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக மட்டும் தான் நினைவிடம் மூடப்பட்டுள்ளது, என்றார்

    2021ல் தமிழகத்தில் அ.தி.மு.க தான் மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும், எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளது. அ.தி.மு.கவிற்கு பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் தேவையில்லை. சட்டமன்றம் வலிமையான ஜனநாயாக அமைப்பு. அதில் தி.மு.க பங்கேற்காமல், மக்களின் பிரச்சனைகள் பேசாமல் இருப்பது, தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம் எனவும் குற்றம்சாட்டினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: