அ.ம.மு.க விவகாரம்: ராஜேந்திர பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

அ.ம.மு.க விவகாரம்: ராஜேந்திர பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

அமைச்சர் ஜெயக்குமார்

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் ஊழியர்கள், தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பொங்கல் திருநாள் என்பது தமிழகத்தில் ஜாதி, மதம் பாராமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றார். பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு அறிவித்த 2,500 ரூபாய்யுடன், பொங்கல் தொகுப்பு வழங்கியதற்கு தமிழக மக்கள் அனைவருமே மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து பேசி அவர், சசிகலாவை உயர்த்திப் பேசினாலும், வால் பிடித்து பேசினாலும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்துக்கொண்டு செயல்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

  அதிமுகவுக்கும் அமமுக வுக்கு இருக்கும் பிரச்சனை அண்ணன் தம்பி பிரச்சனை, அவற்றை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கும் கருத்து குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவரும், இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்த கட்சி ஒரு நாளும் அதிமுகவுடன் சேர முடியாது. அண்ணன் தம்பியாக இருக்க முடியாது என பதிலளித்தார்.

  திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலமும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு பட்டா தரப்படும் என்பதை அறிவித்து, இதுவரை நிறைவேற்றவில்லை. இதுவரை இரண்டு சென்ட் நிலம் கூட திமுகவினர் மக்களுக்காக கொடுத்ததில்லை என்றார் அமைச்சர். மேலும் அதிமுகவை பொறுத்தவரை, அறிவிக்காத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றிய கட்சி அதிமுக என்றும் பதிலளித்தார்.

  2ஜி ஊழல் வழக்கில் திமுகவினர் சுருட்டிய ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நாட்டுடமை ஆக்கினால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் அமைச்சர் கூறினார். ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கோடி பணத்தை தெருவில் அடுக்கினால், மூன்று லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுக்கிக் கொண்டே போகலாம் என்றும் அமைச்சர் விமர்சித்தார். தேர்தல் நடந்த சமயத்தில் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் திமுகவில் இருக்கும் கட்சிகள் தேர்தல் சமயத்தில் அதிமுகவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: