மழை பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள மழை பாதிப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசின் ஏற்பாட்டில் பேரிடர் மற்றும் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு சார்பில் நானும் துறை அதிகாரிகளும் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். தமிழ்நாட்டில் இருக்கும் நீர் மேலாண்மை மற்றும் குடிமராத்து பணிகள் குறித்து நேரில் பார்வையிடுங்கள் என அவர்களோடு பகிர்ந்து கொண்டோம். ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிக மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்க ஏற்பாடு எடுக்கப்படுள்ளது. நாளை பச்சை மற்றும் மஞ்சள் நிற அளவில் மட்டுமே மழை இருக்கும் என எச்சரிக்கை கிடைக்க பெற்றுள்ளது.
சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, திருவள்ளுவர், திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். ஐந்து நாள்களுக்குள்ள வானிலை அறிக்கையைக் கண்காணித்துவருகிறோம். நிலைமைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளோம்.
பாதிக்கப்படக் கூடிய 4,099 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை ஆய்வுக் கூட்டம் நடைபெறும். மழை பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவைஇல்லை. வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை. ’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.