தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

கடந்த 2006, 2011, 2016 என மூன்று முறையாக தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்
அமைச்சர் துரைக்கண்ணு
  • Share this:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அக்டோபர் 31, இரவு 11. 15 மணி அளவில் காலமானார்.

முதலமைச்சர் பழனிசாமி தாயார் மறைவையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக, அக்டோபர் 13 அன்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, உடனடியாக அவர் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் தரப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே, அதற்கும் சேர்த்து மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டன.


அப்போது அமைச்சர் துரைக்கண்ணுவிடம் வீடியோ கால் வழியாகப் பேசி நலம் விசாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சருக்குத் தரப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் பேசினார். இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கொண்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் நுரையீரல் 90 சதவிகிதம் அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னது மருத்துவ மனை நிர்வாகம். பிறகு அவருக்கு எக்மோ சிகிச்சை தரப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சைகள் பலனளிக்காமல் 2020 அக்டோபர் 31 அன்று இரவு 11.15 மணியளவில் மரணத்தைத் தழுவினார்.

அமைச்சர் துரைக்கண்ணு வாழ்க்கை வரலாறு:

வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு 1948 மார்ச் 28ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள ராஜகிரி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரக்கு வயது 72.தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. வரை படித்துள்ளார். படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். பின்னர் எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அ.தி.மு.க வில் இணைந்தார். இவர் பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் கடந்த 2006, 2011, 2016 என மூன்று முறையாக தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் போது ஜெயலலிதாவால் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டார். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க வின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கு பானுமதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் ஐய்யப்பன் (எ) சண்முகபிரபு அதிமுவில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக உள்ளார். மேலும் இவருக்கு நான்கு மகள்களும் உள்ளனர்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading