மீனவர்கள் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்கள் நலனைப் பாதிக்கும் எந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தாலும் தமிழக அரசு அதனை எதிர்க்கும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வரவிருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த திட்டங்கள் எவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றும் மீனவர் நலன் காக்கும் மற்றும் விவசாயிகள் கால்நடை சார்ந்த நலன் காக்கும் அரசாக இந்த அரசு அமையும் என்றும் வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு கொண்டிருந்தாலும் அண்மையில் நடைபெற்ற சம்பவம் சார்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மேலும் புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் அண்ணாமலை தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மீனவர்கள் தாக்குதல் இல்லை என்று கூறி சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது இது சம்பந்தமாக மத்திய அரச உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

    இந்த இரண்டு மாதமும் கொரோனோ பேரிடர் மீட்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டுக் கொண்டிருந்தது. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் துறைசார்ந்த அனைத்து திட்டங்களும் அறிவிக்கப்படும். பா.ஜ.கவினர் எப்போதுமே அவசரப்படுவார்கள். பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அவசரப்படகூடாது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்த அனைத்து திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மீனவர்கள் சுருக்குமடி பயன்படுத்துவது சம்பந்தமான புகார்கள் தமிழக அரசிற்கு வந்திருக்கிறது. அந்த புகார்கள் சம்பந்தமாக தமிழக முதல்வர் துறை அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை அளித்திருக்கின்றனர். இதுகுறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் மீனவர் நலன் பாதிக்கும் வகையில் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அத்திட்டங்களை தமிழக அரசு எதிர்க்கும் என்றார். வடசென்னையில் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் அந்த கடற்கரை பகுதியில் உருவாக்கக் கூடிய மீன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்து துறை ரீதியான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: