11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் பங்கு பெற்று பல பள்ளி மாணவர்களுக்கு, பாராட்டுகளையும், மெடல்களையும் கொடுத்துள்ளேன், ஆனால் அந்த சவகிடங்கில் நான் வைத்த முதல் மாலை 8-ஆம் வகுப்பு படிக்கின்ற ஒரு பள்ளி மாணவனுக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டபேரவையில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பேசிய போது, கேள்விக்கான பதில் சொல்வதற்கு முன்பு நான் ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். நேற்று நடக்க கூடாத காரியம் தஞ்சை களிமேடு என்ற கிராமத்தில் நடந்துள்ளது. 94 வருடம் தொடர்ந்து நடந்து வரும் தனி மடத்திற்கான தேர் விழாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. நள்ளிரவு 3 மணி அளவில் இந்த நிகழ்வு நடந்தாலும், 5 மணிக்கு முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டு உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என சொன்னார். முன்கூட்டியே செல், நான் இரங்கல் தீர்மானம் வாசித்து விட்டு வருகிறேன் என சொன்னார்.
பிறகு, நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றோம். அங்குள்ள சவகிடங்கில் 11 சடலங்கள் இருந்தன. 11 மாதங்களாக பல பள்ளி நிகழ்வுகளில் பங்கு பெற்று பல பள்ளி மாணவர்களுக்கு, பாராட்டுகளையும், மாலைகளையும், மெடல்-களையும் கொடுத்துள்ளேன். ஆனால் அந்த சவகிடங்கில் நான் வைத்த முதல் மாலை 8-ஆம் வகுப்பு படிக்கின்ற ஒரு பள்ளி மாணவன்.
பிறகு முதலமைச்சர் நேரடியாக வந்து கிராம பகுதிகளில் இருக்கின்ற கிட்டத்தட்ட 11 சடலங்களுக்கு நேரடியாக நடந்து சென்று மரியாதை செலுத்தினார். அரசு அறிவித்து 5 லட்சம் ரூபாயையும், திமுக சார்பாக அறிவித்த 2 லட்சம் ரூபாயையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடுத்தார்.
Also Read : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - காரணம் என்ன?
எதிர்கட்சி தலைவராக இருந்தபோது பல காரணங்களுக்காக விவசாயப் பெருங்குடி மக்கள் பலர் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டனர். அப்போது எதிர்கட்சி தலைவராக ஒவ்வொரு வீடு வீடாக, தெருத் தெருவாக சென்று ஆறுதல் தெரிவித்தார். இன்று முதலமைச்சராக அதே பணியை செய்து வருகிறார். எந்நிலையிலும், தன்னிலை மறக்காத ஒரு நல்ல மனிதனை இந்த நாடு முதலமைச்சராக பெற்றுள்ளது என்று தான் சொல்ல முடியும்.
முதலமைச்சர் சொல்வது இந்த நிகழ்வில் அரசியல் பார்க்க வேண்டாம். ஆம், அந்த ஊரில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், பாஜக ஒன்றிய குழு கவுன்சிலர், திமுக மாவட்ட கவுன்சிலர் என மூன்று பேர் அங்கு சேர்ந்து பணியாற்றினார்கள். முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொல்வது, இது நமது ஆட்சி என்பது களத்தில் பிரதிபலிப்பது, இந்த பேரவையிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.