தலா ரூ.6,700: திருப்பூரிலிருந்து பீகாருக்கு சொந்த செலவில் பேருந்தில் செல்லும் தொழிலாளர்கள்

இரண்டு தனியார் பேருந்தை தலா 2 இலட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த 60 தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான பிகாருக்குப் புறப்பட்டனர்.

தலா ரூ.6,700: திருப்பூரிலிருந்து பீகாருக்கு சொந்த செலவில் பேருந்தில் செல்லும் தொழிலாளர்கள்
இரண்டு தனியார் பேருந்தை தலா 2 இலட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த 60 தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான பிகாருக்குப் புறப்பட்டனர்.
  • Share this:
திருப்பூரில் வேலை பார்த்து வந்த பனியன் தொழிலாளர்கள் அங்கிருந்து பீகாருக்கு சொந்த செலவில் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து அவற்றின் மூலம் பீகார் சென்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக  நாடு முழுவதும் மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் திருப்பூரிலேயே தங்கி வந்தனர்.

பனியன் நிறுவனங்களின் விடுதிகளில் தங்கியிருந்த தொழிலாளர்களுக்கு அந்நிறுவனங்களின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வந்தது. மேலும், தனியாக அறை எடுத்துத் தங்கியிருந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் தன்னார்வலர்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தனர்.


நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்கப் பெறாத வடமாநிலத் தொழிலாளர்கள் உணவுக்கு வழியின்றி அறை வாடகை செலுத்த முடியாத இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதேபோன்று பெருமாநல்லூர் அடுத்துள்ள நேதாஜி அப்பேரல் பார்க் பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏதும் கிடைக்காததால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் சொந்த ஊருக்கு தொழிலாளர்களை அனுப்பி வைப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து உடனடியாக தீர்வு எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

ரயிலில் செல்ல விண்ணப்பித்த தொழிலாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதில் நேதாஜி அப்பேரல் பார்க் பகுதியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் பதிவு செய்யவில்லை என்றாலும் காவல்துறை சார்பில் இவர்களுக்கு உடனடியாக பாஸ் பெற்றுத் தரப்பட்டது. இதனடிப்படையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரண்டு தனியார் பேருந்தை தலா 2 இலட்ச ரூபாய் வாடகைக்கு எடுத்த 60 தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான பிகாருக்குப் புறப்பட்டனர்.இன்று அதேபோல் மேலும் மூன்று பேருந்துகளை வாடகைக்கு எடுத்து 90 தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலமான பிகாருக்குப் புறப்பட்டனர். இந்தப் பயணத்தில் தொழிலாளர் ஒருவருக்கு 6,700 ரூபாய் கட்டணம் பெறப்பட்டது.


Also see:
First published: May 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading