Home » News » Tamil-nadu » MGRS AIADMK GOT FIRST VICTORY IN DINDIGUL LOK SABHA CONSTITUENCY VAI

உங்கள் தொகுதி: திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

சீரக சம்பா பிரியாணி, பூட்டு, சுருட்டுக்கு சிறப்பு பெயர் பெற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி திண்டுக்கல். இந்த தொகுதியின் சிறப்புகள் என்னென்ன?

  • Share this:
வீரம் விளைந்த பூமியல்ல... வீரம் செரிந்த மலைக்கோட்டை இந்த திண்டுக்கல் கோட்டை... வெள்ளையனுக்கு எதிராக கொடி பிடித்த வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், ஊமைத்துரை ஆகியோருக்கு அடைக்கலம் தந்த கோட்டை இது... புவிசார் குறியீடு பெற்றுள்ளபோதும் புகழ்பெற்ற பூட்டுத் தொழில் இன்று வெறும் 200 பேர் மட்டுமே ஈடுபடும் அளவுக்கு சுருங்கிவிட்டது. ஒரு காலத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ஸ்பென்சர் நிறுவனத்தால் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட அளவுக்கு வெற்றி கொடி நாட்டிய சுருட்டுத் தொழிலும் அழிவின் விளிம்பில் நிற்கிறது.

இந்த தொகுதியில் செயல்பட்ட 70க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இன்று 40ஆக குறைந்து 10000 பேருக்கே வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. தோல் ஆலைகளால் வேலை கிடைத்தது வரமாக பார்க்கப்பட்டாலும் விளைநிலங்கள் உப்பு பரிந்த பாழ்நிலங்களானதால் சாபமானதே சமகால வரலாறு... கொட்டபட்டியில் விளைந்த சுவை மிக்க சிறிய கத்தரிக்காய் இன்று அழிந்து போனதற்கும், மஞ்சள் காமாலையும், சிறுநீரக கோளாறும் பெருகிப்போனதற்கும் தோல் ஆலைகளையே காரணமாகச் சொல்கிறார்கள் மக்கள்.

திண்டுக்கல்லின் சிறப்பான சீரக சம்பா பிரியாணியின் மணம் தமிழகம் தாண்டியும் வீசி மக்களை சுண்டி இழுக்கிறது. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு முதல் வெற்றியைத் தந்தது திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதான். 1972இல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கிய 6 மாதங்களுக்குள் மாயத்தேவர் என்பவரை இரட்டை இலை சின்னத்தில் களம் இறக்கி வெற்றி பெற வைத்து தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தினார் எம்.ஜிஆர்.


ஆனாலும் இந்த சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது. 7 முறை அந்தக் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலையும் சேர்த்து 3 முறை மட்டுமே அதிமுக இங்கே வாகை சூடியிருக்கிறது. திமுக ஒரேஒருமுறை அதாவது 1996ம் ஆண்டு மட்டுமே திண்டுக்கல் தொகுதியில் வெற்றியை ருசித்தது.

மேலும் படிக்க... நாமக்கல் சட்டமன்றத் தொகுதியின் சிறப்புகளும் அதன் முக்கியத்துவமும்..

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து திமுகவின் பஷீர் அகமது போட்டியிட்டார். அதில் 20,719 வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.பேருந்து நிலையம், சாலைகள் விரிவாக்கப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது திண்டுக்கல். கரூர் சாலை சுரங்கப்பாலப் பணிகள் 2 ஆண்டுகளாக முடியாமல் தாமதமாவது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. 8 ஆண்டுகளாக நீடித்த பாதாளச்சாக்கடைப் பணி நிறைவடைந்ததால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாய் உள்ளனர். குறைகள் இருந்தாலும் அடுத்த தேர்தலை வரவேற்க ஆயத்தமாகிவிட்டார்கள் திண்டுக்கல் மக்கள்...திண்டுக்கல் மலைக்கோட்டை மார்க்சிஸ்ட்டின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமாகுமா... அமைச்சரின் தொகுதியில் அதிமுகவே மீண்டும் வெல்லுமா என்பதற்கான விடை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும்...உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 8, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading