திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக துணி மற்றும் கோணிப்பையால் மூடப்பட்டிருந்தது. இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாளையொட்டி அப்பகுதியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அருகில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை திடீரென மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த எரிந்து கொண்டிருந்த சிலை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
தகவல் அறிந்த அதிமுக கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் அதிமுகவினர் திருப்பத்தூர் - பர்கூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தீப்பொறி சிலையின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய கந்திலி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணயில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்தது அதைத்தொடர்ந்து அதிமுகவினரின் சாலைமறியலால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.