காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி கன மழை கொட்டி தீர்த்தது . இதேபோல் மேல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 18ம் தேதி காலை நீர்வரத்து வினாடிக்கு 25,000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 45 ,000 கனஅடியாக தண்ணீர் வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மாநில எல்லையான பிலிகுண்டு பகுதியில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் மேட்டூர் அணைக்கு 47,436 கன அடி தண்ணீர் வந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 113.66 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று குறைந்து காலை 8 மணி நிலவரப்படி 46,353 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 .350 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.770 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்து 115.350 அடியாக உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை அதிகரித்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 50,000 கனஅடியை கடந்து அதிகரித்தால் இன்னும் மூன்று, நான்கு தினங்களுக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு 120 அடியை எட்டும் பட்சத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12ம் தேதி, டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவேண்டும் என்பது திட்டம். ஆனால் 89 ஆண்டு அணை வரலாற்றில் இதுவரை 17 முறை தான் உரிய தேதியில் திறக்கப்பட்டுள்ளது. 10 முறை முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. 67 முறை கால தாமதமாகத் தான் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கோடை காலத்தில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது. எனவே தொடர்ந்து மழை அதிகரிக்குமானால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இம்மாத இறுதிக்குள், அதாவது உரிய தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்காக குறித்த காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery Delta, Cauvery River, Mettur Dam, Tamilnadu