மேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதக்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்

மேட்டூர் அணையில் பாசியால் துர்நாற்றம்... செத்து மிதக்கும் மீன்கள்... நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்
  • Share this:
மேட்டூர் அணையின் 16- கண் உபரி நீர் போக்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில்,  சுகாதார சீர்கேட்டை சரிசெய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி., கொள்ளளவு 93.47 டி.எம்.சி., இதன் நீர் தேக்கப் பரப்பு 60 சதுர மையில்களாகும். அணையின் நீர் இருப்பு குறைவாக உள்ள காலங்களில் விவசாயிகள் அதன் நிலப்பரப்பு பகுதியில் மானாவாரி பயிர்களான சோளம்,கம்பு, நிலக்கடலை, எள் உள்ளிட்டவைகளை பயிரிடுவது வழக்கம்.

இக் கால கட்டங்களில் , காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் பருவ மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும். அப்போது விளை பொருட்கள் மற்றும் பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்ய இயலாத நிலையில் அவற்றை விவசாயிகள் அப்படியே விட்டு விடுவர். இவ்வாறு நீரில் மூழ்கும் பயிர்கள் தண்ணீரில் அழுகி நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசும்.

மேலும் விவசாயத்திற்கு பயன் படுத்தும் ரசாயன உரம் மற்றும் கர்நாடகத்தின் கரையோர ஆலைகளிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுகள் நீரில் கலந்து நீர் பச்சை நிறமாக மாறும்.இதனால் கடந்த மாதம் மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளான பண்ணவாடி, செட்டிப் பட்டி, கோட்டையூர், காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் மாசடைந்து நிறம் மாறி துர்நாற்றம் வீசியது. இதனால் சுவாசிக்க அவதிப்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் ஊதுபத்தி வைத்து காலத்தை தள்ளி வந்தனர். துர்நாற்றம், காரணமாக மக்கள் குடிக்க மற்றும் கால்நடைகளுக்கு வெளியூர்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தும் கேனில் தண்ணீர் வாங்கியும் பயன்படுத்தி வந்தனர்.

விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டது. மேலும் மீன் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இது தொடர்பான செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியானது. மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நீர்தேக்க பகுதிகளில் நீர் மாதிரி எடுத்துச் சென்று ஆய்வு செய்த வேளாண் பல்கலை கழகத்தின் நுண்ணுயிர் பிரிவு பேராசிரியர் ஜெபஸ்டியன் பிரிட்டோ ராஜ், பேராசிரியர் கலைச்செல்வி ஆகியோர் நீரில் உள்ள ஆல்கே பாசிகளால் தான் இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் படர்ந்திருக்கும் பாசிகளை கட்டுப்படுத்த பட்ட "எபேக்ட்டிவ் மைக்ரோ ஆர்கானிக் "
முறையில் நுண்ணுயிர் கலவை நீரில் கலந்து நீர்தேக்கப் பகுதிகளில் தெளிக்கப்பட்டது. இவ்வாறு தெளிக்கப்படும் நுண்ணுயிர் கலவையால் நன்மை செய்யும் நுண்ணுயிரி பன்மடங்கு பெருக்கமடைந்து ஆல்கே எனும் பாசிகளை முழுமையாக கட்டுபடுத்தி இப்பகுதியில் வீசும் துர்நாற்றம் படிப்படியாக குறைந்தது.
இந் நிலையில் அணையின் 16 கண் உபரி நீர் போக்கி அருகே தேங்கி நிற்கும் நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு மீன்கள் செத்து மிதந்தது. இதனால் இப் பகுதிகளை சுற்றி வசிக்கும் சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டினம், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொற்று நோய்களால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

மேலும் இங்கு செத்து மீதக்கும் மீன்கள் தற்போது மலிவான விலையில் விற்பனைக்கு வரும் இத்தகைய மீன்களை வாங்கி உண்ணும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.இச் செய்தி ஊடகங்கள் மற்றும் செய்தி தாள்களில் வெளியானது. இதனையடுத்து இன்று மாலை அணையின் 16- கண் உபரி நீர் போக்கியைச் சுற்றியுள்ள பகுதிகளில்  தேங்கியுள்ள நீர் பச்சை நிறமாக மாறி  துர்நாற்றம் வீசுவதால் ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டை சரிசெய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading