வடசென்னை பகுதியிலுள்ள திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் சேவை ஜனவரி இறுதியில் துவங்கும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
இதில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம் கோ நகர் வரையிலான நீட்டிப்பு திட்டத்திற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 3,770 கோடி மதிப்பில் 9.51 கிலோ மீட்டர் தொலைவிற்கு 8 நிலையங்களுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த வழித்தடத்தில் இன்று ரயில் இஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், 2021 ஜனவரி இறுதியில் இந்த தடத்தில் ரயில் சேவை துவங்கும் எனவும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.