தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை... கேக் வெட்டி கொண்டாடிய ஊராட்சி அலுவலர்கள்...!

அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 27, 2019, 7:29 AM IST
தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை... கேக் வெட்டி கொண்டாடிய ஊராட்சி அலுவலர்கள்...!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: June 27, 2019, 7:29 AM IST
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. மேலும், வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் காரணமாகவும், போதிய பருவமழை பெய்யாததாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டுவிட்டன. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் சென்னை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

ஆனால், அது பூமியைக் கூட குளிர்விக்காததால், கனமழைக்கு சென்னை மக்கள் ஏங்கி நின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தியாகராயர் நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மழையால் 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

சென்னைக்கு தூத்துக்குடியில் இருந்து 72 பயணிகளுடன் வந்த விமானம், மழை காரணமாக தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் பெங்களூருவில் இருந்து 140 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமிட்டு பின்னர் பெங்களூருவுக்கு திரும்பி சென்றது.

சென்னையில் வானிலை சீரானதும் சென்னைக்கு திரும்பியது. சென்னையில் இருந்து பெங்களூர், திருச்சி, கோழிக்கோடு, துபாய், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை
Loading...
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் உரிய வடிகால் இன்றி கோவில்கள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களையும் காவல் நிலையத்தையும் விட்டு வைக்காமல் தேங்கியது. மழை தண்ணீர் கழிவு நீருடன் கலந்து உள்ளே புகுந்து தெருக்களிலும் வழிந்தோடி வெளியேற வழியின்றி பொதுமக்களை நோய்த் தொற்றுக்கு ஆளாக்கும் அவல நிலையினை ஏற்படுத்தியது.

அயப்பாக்கத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் கடந்த 6 மாதமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அயப்பாக்கம் அம்பத்தூர் முகப்பேர் மோரை,வீராபுரம், வெள்ளானுர் திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பகுதியில் மழை பெய்ததால் அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

சாலைகளில் மழைநீர் தேக்கம்

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி, குன்றத்தூர் மாங்காடு, குமணன்சாவடி, ஐயப்பன்தாங்கல், போரூர், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, நசரத்பேட்டை, மதுரவாயல் மற்றும் நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது... இதனால், ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழை

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், மறைமலை நகர், திருவொற்றியூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

காரைக்கால், நாகையில் கனமழை

புதுவை மாநிலம் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2-வது நாளாக கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொட்டி தீர்த்த கன மழையினால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிவுநீர் மழைநீர் கலந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்ததால் மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றுவோர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

விழுப்புரத்தில் இடியுடன் கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன்கூடிய மழை பெய்துவருகிறது. நேற்று மாலை விழுப்புரம், வளவனூர், விக்கிரவண்டி, கானை என விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

ஆந்திராவில் தவளை மழை பெய்ததால் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளகட்ட அருகே உள்ள முகுந்தபுரம் கிராமத்தில் நேற்று முந்தினம் இரவு மழை பெய்தபோது வயல்வெளியில் மஞ்சள் நிறத்தினால் ஆன தவளைகளும் மழையுடன் சேர்ந்து விழுந்துள்ளன என்று அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் மீன் மழை பெய்துள்ளது. ஆனால் தற்போது தவளை மழை பெய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

வடக்கு, தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also see... தளபதிகளை இழந்த தினகரன்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...