சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் விட்டு விட்டு மழைபெய்தது. அதேபோல், தமிழகத்தின் புதுக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மேகமூட்டங்கள் திரண்ட போதும், மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் நேற்று பகலில் தொடங்கிய மழை, மாலை வரை நீடித்தது. இதனால், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வெள்ளிநீர் வீழ்ச்சியில் தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழையின் காரணமாக நட்சத்திர ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குற்றாலத்தில் கடந்த 4 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
சென்னையில் இடி, மின்னலுடன் விட்டு விட்டு பெய்த மழை
சென்னையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் விட்டு விட்டு மழை பெய்தது. அண்ணாநகர், நுங்கம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதேபோல திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மட்டுமின்றி சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க... நல்லாசிரியர் விருதுக்கு புது கட்டுப்பாடு!
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.