METEOROLOGICAL DEPARTMENT ANNOUNCED REGARDING RAIN SKD
கடலோர மாவட்டங்களில் 5, 6 தேதிகளில் இடிமின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
மாதிரிப் படம்
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்த நிலையில், 6ஆம் தேதி வரை இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரங்களில் இரவு நேரத்தில் கடும் குளிரும், பகலில் கடும் வெயிலும் வாட்டி வதைத்த நிலையில், 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர், எழும்பூர், கிண்டி உள்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இதேபோல், தாம்பரம், பூவிருந்தவல்லி உள்பட புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான இரும்பேடு, சேவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.