இடி மின்னலுடன் 3 நாட்களுக்கு மழை... இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இடம்பெற்றுள்ளதா?

மழை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்

 • Share this:
  அடுத்த மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

  இது குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில், ஆகஸ்ட் 17-ல் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  ஆகஸ்ட் 20 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21ஆம் தேதி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

  சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  மீனவர்கள்


  வங்க கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

  வங்க கடல் பகுதிகளில், 17, 18 ஆகிய தேதிகளில், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் படுகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  Must Read : டீசல் விலையைக் குறைக்காதது ஏன்? - பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

  ஆகஸ்ட் 17 முதல் 19ஆம் தேதி வரையில், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: