• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக, தெற்கு ஆந்திர, கேரள கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • Share this:
    தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நெல்லையில் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதோடு, சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது.

    தமிழக-கேரள எல்லையில் அடிக்கடி பெய்து வரும் மழையால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நீர்மட்டம் 85 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 980 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், வினாடிக்கு 1,068 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படுவதோடு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யும் எனவும், இதர கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யுமெனவும் தெரிவித்துள்ளது.

    சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக, தெற்கு ஆந்திர, கேரள கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது.

    Must Read : கற்றல் பாதிப்பைக் குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் - எதிர்ப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

    இதன் தொடர்ச்சியாக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: