மேகதாது அணை: எடியூரப்பாவின் அழைப்பை நம்பி தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது - ராமதாஸ்

ராமதாஸ்

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்குதான் பாதிப்பு ஏற்படும்.

  • Share this:
    மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அழைப்பை நம்பி தமிழக அரசு பேச்சு நடத்தக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. மேகதாது பகுதியில் அணை கட்டுவதை நியாயப்படுத்த தமிழகத்தில் பவானி ஆற்று பாசனப் பகுதியில் குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்கள் கர்நாடகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தப்படுவதைப் போல, மேகதாது அணை மற்றும் நீர்மின்னுற்பத்தி திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறுவது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.

    மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும். கர்நாடகத்தில் இப்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபிபி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் கொள்ளளவு 115 டி.எம்.சி ஆகும்.  ஏற்கனவே கர்நாடகா அங்குள்ள நீர்நிலைகளை இணைத்து 40 டி.எம்.சி வரை தண்ணீரை கணக்கில் காட்டாமல் சேமித்து வைக்கிறது. மேகதாது அணையில் 70 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்றால் ஒரே நேரத்தில் 225 டி.எம்.சி நீரை சேமித்து வைக்க இயலும். இப்போதே உபரி நீரை மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அனுப்புகிறது. புதிய அணையும் கட்டப் பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட வராது. இது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.

    Also read: தேர்தல் தோல்விக்கு பிறகு கமல்ஹாசன் எப்படி உள்ளார்? பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்த பிரதமர் மோடி!

    கடந்த காலங்களில் வீசப்பட்ட அதே வலையைத் தான் இப்போது எடியூரப்பா வீசியிருக்கிறார். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்குதான் பாதிப்பு ஏற்படும். 1970-களில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக, சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால், நமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். தமிழக அரசுடன் பேச்சு நடத்திக் கொண்டே காவிரியின் குறுக்கே 4 அணைகளை கர்நாடகம் கட்டியது.

    காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நேர்மையும், அறமும் எத்தகையது என்பதை கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்களும், பட்ட காயங்களும் நமக்குச் சொல்லும். அவற்றை நினைவில் கொண்டு மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: