தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்... ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம்

கொரோனா தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

  • Share this:
    கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 430051 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தடுப்பூசி முகாம்களில் ஒரே நேரத்தில் பலர் பங்கேற்க உள்ளதால், கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

    அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் அதனை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

    கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவை மாநகராட்சியில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சேலத்தில் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம்களுக்காக தேர்தலில் வழங்கப்படும் பூத் சிலிப் போலவே, வீடு வீடாக சென்று அதிகாரிகள் டோக்கன்களை வழங்கினர்.

    Also Read : தமிழகத்தில் பிரபல நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு... ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

     

    மெகா தடுப்பூசி முகாமையொட்டி திருவண்ணாமலையில் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படும் என, பேரூராட்சி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் முதல் பரிசாக செல்போன், இரண்டாம் பரிசாக மின்சார அடுப்பு மற்றும் மூன்றாம் பரிசாக உடலின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    தமிழகத்தில் இதுவரை, நாளொன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் எனும் விகிதத்தில், 3 கோடியே 48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளதாக தமிழக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: