சிறப்பு பரிசு... சுவாரஸ்யங்களுடன் நடந்த மெகா தடுப்பூசி முகாம்: முதலிடம் பிடித்த சென்னை

தடுப்பூசி

கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் 100 நபர்களுக்கு தலா 200 ரூபாய் வழங்கப்பட்டது.

 • Share this:
  தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 80 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

  தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3ஆவது அலை முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டன.

  கேரள மாநில எல்லையையொட்டிய கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கத்தில் அதிகளவில் முகாம்கள் அமைக்கப்பட்டன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் எல்லைநாயக்கன்பட்டியில் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

  சென்னை புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். சென்னை முழுவதும் ஆயிரத்து 600 முகாம்களில் 3 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த எருமலை நாயக்கன்பட்டி கிராமத்தில் தடுப்பூசி செலுத்த முதலில் வந்த 100 நபர்களுக்கு டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வெட் கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்சி வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால், பொதுமக்கள் காலை 7 மணி முதலே தடுப்பூசி மையத்தில் குவிந்தனர்.

  மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 500 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. தடுப்பூசி போடுபவர்களின் பெயர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்தார். கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து ஏராளமானோர் குவிந்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் 100 நபர்களுக்கு தலா 200 ரூபாய் வழங்கப்பட்டது.

  காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை அடுத்த புலியூர் கிராமத்தில் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானோர் கூடிய நிலையில், மருத்துவக் குழுவினர் யாரும் வராததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், சென்னையை அடுத்த மீனம்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாமை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் ஆர்வத்தை பொறுத்து வாரந்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றார்.

  தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 8 மாவட்டங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 80 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவையில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போடப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி திருவள்ளூரில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். அதேவேளையில், விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் 21 ஆயிரத்து 29 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

  Must Read : TASMAC  - மதுப்பிரியர்களின் நலனுக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய முக்கிய தகவல்

  இந்தியாவிலேயே முதல்முறையாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழ்நாட்டில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: