Home /News /tamil-nadu /

போலீசார் தாக்கினார்கள்: சாப்பாடு தரவில்லை- நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுது ஆர்பாட்டம் செய்த மீரா மிதுன்

போலீசார் தாக்கினார்கள்: சாப்பாடு தரவில்லை- நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுது ஆர்பாட்டம் செய்த மீரா மிதுன்

மீரா மிதுன்

மீரா மிதுன்

காவல்துறையினர் தனக்கு உணவு வாங்கி கொடுக்கவில்லை மீரா மிதுன் கண்ணீர்விட்டு கதறி அழுது ஆர்பாட்டம் செய்தார்.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னை நடிகையாகவும் சூப்பர் மாடல் எனவும் தன்னைத் தானே புகழ்ந்து வந்த மீரா மிதுன் கடந்த வாரத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை குறித்து அநாகரிகமான முறையில் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் மக்கள் அனைவரும் அப்பிரிவை சார்ந்த மக்களை வெறுகின்றனர் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன் மீது கடந்த 7 ம் தேதி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மீரா மிதுனை விசாரணை செய்வதற்காக சம்மன் அளித்தும் அவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். மேலும் தன்னை போலீசார் பிடிக்க முடியாது எனவும் மீரா மிதுன் காவல்துறையினருக்கு சவால் விட்டிருந்தார்.
போலீசார் விசாரணையில் மீரா மிதுன் தனது ஆண் நண்பர் ஷாம் அபிஷேக் என்பவருடன் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற சைபர் கிரைம் போலீசார் 14-ம் தேதி மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை கடந்து சென்ற மீராமிதுன் போலீசார் தன்னை தாக்கியதாகவும் மேலும் தனக்கு உணவு வாங்கி கொடுக்கவில்லை எனவும் அவர் கண்ணீர்விட்டு கதறி அழுது ஆர்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விசாரணைக்குப் பிறகு சைதாப்பேட்டை 17-ஆவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் கிருஷ்ணன் முன்னிலையில் போலீசார் மீரா மிதுனை ஆஜர்படுத்தினர்.

மீரா மிதுன், "தன் மீது தவறு இல்லையெனவும், தன்னை பழி வாங்கும் நோக்கில் காவல் துறை கைது செய்ததாக" மேஜிஸ்ட்ரேட் முன்பு தன் தரப்பு விளக்கங்களை தெரிவித்துள்ளார். மேலும், "தான் குறிப்பிட்ட அந்த சமுதாய அனைத்து மக்களையும் தவறாக தான் கூறவில்லை எனவும், தன்னை பழி வாங்கிய திரை திறையினரை மட்டும் தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும்" மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கதறி அழுது தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீசார் சமர்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்ற காவல் பிறப்பிக்க உத்தரவிடுவதாக மாஜிஸ்ட்ரேட் தெரிவித்து  மீரா மிதுனை வருகின்ற 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகை மீரா மிதுனை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Actress Meera Mithun

அடுத்த செய்தி