மக்களவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்துக: வைகோ, திருமாவளவன் கோரிக்கை

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம், கருணாநிதி மறைவு, ஏ.கே.போஸ் மறைவு, பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவி பறிப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

News18 Tamil
Updated: February 11, 2019, 10:45 PM IST
மக்களவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்துக: வைகோ, திருமாவளவன் கோரிக்கை
வைகோ, திருமாவளவன்
News18 Tamil
Updated: February 11, 2019, 10:45 PM IST
மக்களவை தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்த வேண்டுமெனத் திமுகவைத் தொடர்ந்து, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம், கருணாநிதி மறைவு, ஏ.கே.போஸ் மறைவு, பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவி பறிப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

மக்களவை தேர்தலோடு இந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்திட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திமுக, இதற்கு பாஜகவும், அதிமுகவும் தடையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், திமுகவைத் தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 21 தொகுதிகளுக்கான தேர்தலை நடத்திக்கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அந்த அழுத்தத்திற்கு உட்பட்டுச் செயல்பட்டால், ஜனநாயகக் கோட்பாட்டுக்குக் கேடு செய்கின்ற குற்றவாளி என்ற குற்றச்சாட்டிற்குத் தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். இத்தகைய ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

மொத்தம் 234 தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல்முறை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதனால் அந்தத் தொகுதிகளுக்கான வளர்ச்சிப் பணிகள் பாதிப்பது மட்டுமின்றி, பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் இதுவே காரணமாக இருப்பதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் செலவு, காலதாமதம் இவற்றைத் தவிர்ப்பதோடு, இடைத்தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா செய்வதுதான் என்ற நிலையை மாற்ற, மக்களவை தேர்தலோடு 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்திட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், 21 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தாமல் ஒத்திப்போடுவது, அதிமுக-பாஜக கூட்டணி பேரங்களில் ஒன்று எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக, பாஜகவைத் தவிர்த்துப் பெரும்பாலான கட்சிகள் இதே கோரிக்கையை வலியுறுத்துவதால், மக்களவை தேர்தலோடு 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...