சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகரத் தொடரி வெளியிடவில்லை. இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
யார் அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா? அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன? எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மாநகரத் தொடரி விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்தப் பெயர் மாற்றம், தமிழக அரசுக்குத் தெரியுமா? இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகளாக, வான் ஊர்திகள், தொடரி நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்து வருகின்றன. இதுவரை எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது இல்லை. ஆனால், கேரளத்தில் திருவனந்தபுரம் வான்ஊர்தி நிலையத்தின் பராமரிப்புப் பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ எனப் பெயர் மாற்றம் செய்ததை, கேரள மாநில அரசு கடுமையாகக் கண்டித்து இருக்கின்றது. உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தன் பெயரை எழுதினால், ஒப்புக் கொள்வீர்களா? அதுபோல, வான் ஊர்தி மற்றும் தொடரி நிலையங்களைப் பராமரிக்கின்ற நிறுவனங்கள், அவற்றைச் சொந்தம் கொண்டாட முடியாது.
சென்னை வான்ஊர்தி நிலையத்தின் முன்பு இருந்த அண்ணா, காமராசர் பெயர்ப்பலகைகளை நீக்கினார்கள். இன்றுவரை திரும்ப வைக்கவில்லை. ஒருவேளை, சென்னைக்கும் அதானி பெயரைச் சூட்டத் திட்டம் வைத்து இருக்கின்றார்களா? என்பதற்கு, மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும்“ என்றுள்ளார்.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.