சாதி ஆணவப் படுகொலை, பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் சாதி ஆணவப் படுகொலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளி ஊரைச் சேர்ந்த, மனம் ஒருமித்து காதல் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ்-சுவாதி இருவரையும் கொடூரமாகக் கொலை செய்து கர்நாடகாவில் உள்ள ஆற்றில் வீசி எறிந்துள்ள கொடுமை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மனம் விரும்பி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு ஓசூரில் வசித்து வந்த நந்தீஷ்-சுவாதி இருவரையும், சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்கள் "குலதெய்வம் கோவிலுக்குப் போகலாம்," என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் சித்ரவதை செய்து கொன்று கை, கால்களைக் கட்டி கர்நாடகாவில் உள்ள சிம்சா ஆற்றில் தூக்கிப் போட்டுள்ளனர். இருவரின் உடல்களையும், கர்நாடகக் காவல்துறையினர் சிவன சமுத்திரா நீர்வீழ்ச்சியில் கண்டெடுத்துள்ளனர். சாதி ஆணவப் படுகொலை செய்துள்ள குற்றவாளிகள் நாகரிக மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இக்கொடூரக் கொலை புரிந்தவர்கள் தப்பிவிடாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சாதி ஆணவப் படுகொலைகள் சர்வ சாதாரணமாகத் தொடர்ந்து நிகழ்ந்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.
கடந்த மாதம் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தளவாய்ப்பட்டி ஊரில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி இராஜலட்சுமி, தினேஷ்குமார் என்ற வெறியனால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இராஜலட்சுமி, தலை அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவி சௌமியா, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த கொடுமை நம்மை உலுக்குகிறது.
பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சௌமியா, தீபாவளி விடுமுறைக்குத் தனது சொந்த ஊருக்கு வந்தபோது, நவம்பர் 5-ம் தேதி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவரை ரமேஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு கயவர்கள் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். மயங்கிக் கிடந்த சௌமியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு நாட்களில் உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
சௌமியா, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை குறித்து கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட பின்புதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி இன சிறுமி மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கும், கொடூர கொலைக்கும் ஆளாக்கப்படும் கொடுமைகளைக் காவல்துறை புகாரைப் பதிவு செய்யக் கூட மறுப்பது அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஆதிக்க மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது.
சாதி ஆணவப் படுகொலைகள் நடத்தும் கொடூரக் குற்றவாளிகள் மற்றும் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று வைகோ கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Honor killing, MDMK, Vaiko