48 நாட்களுக்கு பின் நண்பனை பார்த்து உற்சாகத்தில் துள்ளிக்குதித்த வளர்ப்பு நாய்... அபாயம்பிகை - அப்பு ப்ரண்ட்ஷிப்

48 நாட்களுக்கு பின் நண்பனை பார்த்து உற்சாகத்தில் துள்ளிக்குதித்த வளர்ப்பு நாய்... அபாயம்பிகை - அப்பு ப்ரண்ட்ஷிப்

 மயிலாடுதுறைக்கு திரும்பிய கோயில் யானை அபயாம்பாளைக் கண்டு உற்சாகமடைந்து குதூகலத்துடன் சுற்றி சுற்றி வந்தது வளர்ப்பு  நாய் அப்பு.

 • Share this:
  தமிழக அரசின் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு கடந்த மாதம் 6-ம் தேதி மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாயூரநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் முகாமில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் வனப்பகுதியில் வலம் வந்த யானை முகாம் நிறைவடைந்து நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தடைந்தது.

  கோயிலுக்கு வந்த யானைக்கு இந்து அறநிலையத்துறை மயிலாடுதுறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கோயிலுக்கு வந்த அபயாம்பிகை யானையை நாய் ஒன்று குதூகலத்துடன் சுற்றிசுற்றி வந்தது. கோயில் வாசலில் இறக்கி விடப்பட்டு கோயில் உள்ளே சென்ற யானையின் பின்னாலேயே ஓடியது. கோயிலுக்குள் சென்று யானைக்கு பூஜை செய்தபோதும் யானையை சுற்றியே வலம் வந்து உற்சாகமடைந்து.

  மாயூரநாதர் கோயில் யானைப்பாகன் செந்தில் தனது வீட்டில் ஏழு வருடங்களாக வளர்த்துவரும் அப்பு என்ற வளர்ப்பு நாய் யானையுடன் நட்பாக பழகி வருவதாகவும், யானை கோயிலுக்கு சென்றாலும், வெளி இடங்களுக்குச் செல்லும்போது எப்போதும் யானையை பின் தொடர்ந்து செல்லும் என்றும், யானை முகாமுக்கு சென்றபோது சோர்வுடன் காணப்பட்டதாகவும், முகாமுக்கு சென்று 48 நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த யானை அபயாம்பிகை கண்டு சந்தோஷம் அடைந்ததாகவும் யானைப்பாகன் செந்தில் தெரிவித்தார்.

  மேலும் யானைக்கு போடும் பிஸ்கட்டை சாப்பிடுவதையும் நாய் அப்பு வாடிக்கையாக வைத்துள்ளது. பிற நாய்கள் யானையின் அருகே சென்றால் அடித்து விரட்டிவிடும்  என்றும் அப்புவை கண்டால் பாசமுடன் விளையாடும் என்று யானைப்பாகன் செந்தில் தெரிவித்தார். யானை-நாய் இடையிலான நட்பை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
  Published by:Vijay R
  First published: