குத்தாலம் அருகே 13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சிறுமியை தேடி வந்த உறவினர்கள், சிறுமியின் மாமா வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி அணிந்திருந்த ஆடைகள் கிழிந்து ரத்தக்கறை இருந்ததால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய குத்தாலம் போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீசார் சில இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக திருவாரூர் மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு அமரர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டது.
குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை பகுதியில் அமரர் ஊர்தியை வழிமறித்து கொட்டும் மழையில் கிராமமக்கள் நடவடிக்கை எடுக்ககோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூம்புகார்-கல்லணை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று 2 நாட்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் சாலைமறியலை கைவிட்டு பிரேதத்தை எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார் (மயிலாடுதுறை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.