செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை ஐந்தே நிமிடத்தில் விரட்டிப் பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டு!

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்

செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் என்ற இடத்தில் கொள்ளையர்களின் வாகனத்தை மறித்தார். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் வயலில் இறங்கி தப்பியோடினர். அங்கும் அவர்களை விரட்டிச் சென்ற காவலர் சுரேஷ் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று கொள்ளையர்களில் ஒருவனை பிடித்தார்.

 • Share this:
  மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில்  தப்பிச்சென்ற வழிப்பறிக் கொள்ளையர்களை துரத்திச் சென்று ஐந்தே நிமிடத்தில்  மடக்கிப்பிடித்த காவலருக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் உபகோட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கடலி என்ற கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற மூதாட்டி, கடலி மெயின்ரோட்டில் இன்று காலை தனியே நடந்து சென்றுள்ளார்.  அப்போது, அவ்வழியே பல்சர் வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு மர்மநபர்கள் மூதாட்டி மங்களம் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதில், மூதாட்டி மங்களம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

  அப்போது, குத்தாலம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் சுரேஷ் நல்லாடை செக்போஸ்டில் டியூட்டி மாற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த காவலர் சுரேஷ், சற்றும் தாமதிக்காமல், மூதாட்டியிடம் விளக்கமும் கேட்காமல் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வழிப்பறிக் கொள்ளையர்களின் வாகனத்தை தனது வாகனத்தால் மோதியுள்ளார். ஆனால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வேகமாக வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

  Also Read:  பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

  உடனடியாக தனது வாகனத்தை திருப்பி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று, செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் என்ற இடத்தில் கொள்ளையர்களின் வாகனத்தை மறித்தார். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் வயலில் இறங்கி தப்பியோடினர். அங்கும் அவர்களை விரட்டிச் சென்ற காவலர் சுரேஷ் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று கொள்ளையர்களில் ஒருவனை பிடித்தார்.

  அப்போது அவ்வழியே சென்ற தலைமை காவலர் அன்பழகன் கொள்ளையனை தப்பியோடாமல் முதல்நிலை காவலர் சுரேஷக்கு உதவினார். மற்றொரு கொள்ளையன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடினான். இதையடுத்து, காவலர் சுரேஷ் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் செம்பனார்கோயில் காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன், தனிப்படை காவல் ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் விரைந்து சென்று பிடிபட்ட கொள்ளையனை செம்பனார்கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

  Also Read: மணமேடையில் இருக்க வேண்டிய மகனை பிணவறையில் படுக்க வைத்த தந்தை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

  சம்பவம் நடைபெற்ற இடம் பெரம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சுகந்தி, கொள்ளையனை பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவன் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலைச் சேர்ந்த குணசேகரன் மகன் முத்து என்கிற முத்தழகன் என்பது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து, நகையுடன் தப்பியோடிய மற்றொரு மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு வழிப்பறிக்கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணெதிரே நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளை நடைபெற்ற ஐந்தே நிமிடத்தில் கொள்ளையனை மடக்கிப்பிடித்த காவலர் சுரேஷை காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்.

  செய்தியாளர் கிருஷ்ணகுமார். மயிலாடுதுறை
  Published by:Arun
  First published: