மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11-க்கு பதிலாக செப்டம்பர் 12-இல் அனுசரிக்கப்பட வேண்டும் என பாரதியின் இறப்பு ஆவணங்களுடன் கால் நூற்றாண்டுகளாக
மயிலாடுதுறையைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் சுப்புரத்தினம் போராடி வருகிறார். பாரதியின் நூற்றாண்டு விழாவிலாவது வரலாற்றுப் பிழை திருத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என மயிலாடுதுறை சேர்ந்த தமிழ் பேராசிரியர் சுப்புரத்தினம் கால் நுற்றாண்டு காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். தனது இறுதி காலத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாரதியார் தனது 39-ஆவது வயதில் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் இறந்துள்ளார். அதனால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பது அடுத்த நாள் கணக்கில் தான் வரும் என்பதால் செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிட்டு அவரது உறவினர்கள் சரியான முறையில் அவரது இறப்பை பதிவு செய்துள்ளனர்.
ஆனால் அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சுவழக்கிலும் பாரதியார் செப்டம்பர் 11-ஆம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்து விட்டது. ஆனால் சென்னை மாநகராட்சியில் உள்ள பதிவேடு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிடுகிறது.
இது தொடர்பாக பாரதி ஆய்வாளரும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான முனைவர் சுப்புரத்தினம், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 12 என அதிகாரபூர்வமான தேதியை மாற்ற வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவரது முயற்சியின் பயனாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு இல்ல மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டில் பாரதியார் இறந்தநாள் செப்டம்பர் 12 என 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசின் அரசிதழிலும், அதிகாரபூர்வ அறிவிப்பு செப்டம்பர் 12 என அறிவிக்கப்படாததால் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளால் செப்டம்பர் 11ஆம் தேதியே பாரதியாரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
மேலும் நாள்காட்டிகளிலும், பாடக்குறிப்புகளிலும் இது மாற்றம் செய்யப்படவில்லை. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இந்த முரண்பாடு அதிகாரபூர்வமாக களையப்பட வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார் - மயிலாடுதுறை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.