முதல்வர் ஸ்டாலினுக்கு 1001 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிய பாஜகவினர்!

முதல்வருக்கு வாழ்த்து அட்டை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் பாஜக, இந்து முன்னணிஉள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 • Share this:
  மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு மட்டும் முதலமைச்சர் வாழ்த்து கூறுவதாகவும் இதனை சுட்டிக்காட்டும் வகையில்  முதலமைச்சருக்கு  மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்திலிருந்து 1001 விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை பாஜக நிர்வாகிகள் அனுப்பினர்.

  விநாயகர் சதுர்த்தி பண்டிக்கை வரும் 10ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேவேளையில், வீடுகளில் விநாயகர் சதுத்தி கொண்டாட தடை இல்லை என்றும் சிறிய கோவில்கள் திறந்திருக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்ப்பை மீறி விநாயகர் சதுர்த்தி பண்டிகை பொது இடங்களில் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட மாற்று மதத்தினருக்கு மட்டும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பண்டிக்கை வாழ்த்து தெரிவிப்பதாகவும் அதனை சுட்டிக்காட்டும் வகையில் அவருக்கு பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

  மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் பங்கேற்று, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து 1001 தபால் அட்டைகளை  முதலமைச்சருக்கு அனுப்பினர்.

  இதையும் படிங்க: விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு


  மற்ற மதத்தினருக்கு பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கும் தமிழக முதல்வர் இந்துக்களுக்கு மட்டும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்காததை சுட்டிக்காட்டும் வகையில் இந்த வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக தமிழக முதலமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில், பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: கிருஷ்ணகுமார்-மயிலாடுதுறை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: