மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ஜான்சன் சத்தியசீலன் மகன் விக்டர் வினோத்குமார்.35. இவரது மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்.37. காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு திருமணமாகி கேப்ரியல் பிரின்ஸ்.9. என்ற மகனும், பெர்னிக்கா சஜன்.6. என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 6 மாத காலமாக கணவனை பிரிந்து ஹேமா ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தனது தந்தை அய்யாபிள்ளை வீட்டில் வசித்து வருகிறார்.
ஹேமா ஜூலியட், சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து ஹேமா ஜூலியட் பஸ்ஸில் செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். கணவனுடன் செல்ல ஹேமா ஜூலியட் மறுக்கவே ஆத்திரமடைந்த விக்டர் வினோத்குமார், தனது மனைவி ஹேமா ஜூலியட்டின் கழுத்தை பிளேடால் கிழித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்த செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் விக்டர் வினோத்குமாரை கைது செய்தனர். கூட்டம் அதிகமுள்ள கடைவீதியில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.