மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நடுவழியில் நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதிப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து நடுவீதியில் நின்று விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மயிலாடுதுறையில், திருக்கடையூரில் இருந்து மயிலாடுதுறை வந்த அரசு பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று நின்றுவிட்டது.
பேருந்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பயணம் செய்து வந்தனர். வண்டியை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம் என்று கண்டக்டர் உடன் 2 ஆண் பயணிகள், மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் உதவியுடன் பேருந்தை பின்புறம் தள்ளி விட்டு இயக்க முயற்சித்தனர். அது சற்று மேடான பகுதி என்பதால் பேருந்தை தள்ளி விடுவதில் சிரமம் ஏற்பட்டது. பயணிகள் இறக்கிவிடப்பட்டு முன்புறம் இருந்து தள்ளினர்.
இதனிடையே பேருந்தில் பயணித்தவர்களில் பலர் இறங்கி சென்றனர். சுமார் 15 நிமிடங்கள் முயற்சிக்குப்பின் பேருந்து ஸ்டார்ட் ஆனது. அதன் பின்னர் மீதமிருந்த பயணிகளுடன் பேருந்து புறப்பட்டு சென்றது. பழைய பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, நல்ல உதிரிபாகங்கள் உடன் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.