மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாடு காரணமாக பாரம் அடிக்கத் தேவையான உரங்கள் இன்றி பருத்தி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக பருத்திக்கு சொட்டுநீர் பாசனம் முறையில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை முடிந்த பின்னர் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் இறங்கியுள்ளனர்.
சொட்டுநீர் பாசனம் முறையில் பருத்தி பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்திருந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7800க்கு விற்பனையானது.
இந்த விலை இதுவரை இல்லாத அதிகபட்ச விலையாகும். இதன்காரணமாக, இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவிலான பருத்தி பயிரிட்டுள்ளனர். பருத்தி பயிரில் களை வெட்டி, 15 நாட்களுக்குப் பிறகு யூரியா மேலுரம் இட்டு, தற்போது 30 நாட்களை கடந்துள்ள நிலையில் யூரியா, அடியுரம், டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து வைத்து பாரம் அடிக்கும் பருவத்தில் உள்ளது. தற்போது மாவட்டத்தல் நிலவிவரும் உரத்தட்டுப்பாட்டின் காரணமாக பாரம் அடிக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
மேலும், அண்மையில் 4 நாட்கள் பெய்த மழையால் பருத்திப் பயிர்களில் தண்ணீர் தேங்கியதாலும் பாரம் அடிக்கும் பருவம் கடந்துள்ளது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு அரசு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார் ஜி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.